நடிப்பு: விஜய், அனுஷ்கா, சலீம் கவுஸ், ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே

ஒளிப்பதிவு: கோபிநாத்
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: பாபு சிவன்
தயாரிப்பு: ஏவிஎம்

மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.

கதைப்படி ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்) ஒரு தூத்துக்குடி பையன். ப்ளஸ்டூவை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் (ஸ்ரீஹரி) மாதிரி பெரிய போலீஸ் ஆ…பீஸர் ஆவது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார்.

வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார்.

அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.

இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, ‘நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட’ என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.

ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார்.

விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்… (ஹை… டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தை அழிக்கிறார்…

இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா… இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது. எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம்.

கஷ்டப்பட்டு நடிக்க விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே… இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.

கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். சகிக்கலை!

படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம் (இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!).

அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.

முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்!

கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை.

விஜய் ஆண்டனி… பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் ‘ஏன் இந்த கொல வெறி’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஒரு அதிவேகம்.

நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.

படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம ஓடு ஓடு ஓடு என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்லக் கூடும்!!


அசல் – திரை விமர்சனம்




























நடிகர்கள்: அஜீத் (இரட்டை வேடம்), பாவனா, சமீரா ரெட்டி, சம்பத், பிரபு, ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ்
ஒளிப்பதிவு: பிரசாந்த் டி மாஷாலே
இசை: பரத்வாஜ்
கதை, திரைக்கதை வசனம்: சரண், யூகி சேது, அஜீத்
இணை இயக்கம்: அஜீத்
இயக்கம்: சரண்
தயாரிப்பு: சிவாஜி பிலிம்ஸ் பிரபு, ராம்குமார்
பிஆர்ஓ: டைமண்ட் பாபு

பங்காளிச் சண்டை என்ற, தலைமுறை தலைமுறையாக நாம் பார்த்துப் பழக்கப்பட்ட கதைக்கு ஆயுத வியாபாரம், அண்டர்வேர்ல்டு டான், பிரான்ஸ் லொக்கேஷன் என முடிந்த வரை பளபளப்பேற்றி அசலாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.

ஆயுத வியாபாரி, நிழல் உலக தாதா அஜீத்துக்கு முன்று மகன்கள்… சம்பத், ராஜீவ் கிருஷ்ணா இருவரும் சட்டப்பூர்வ மனைவிக்குப் பிறந்தவர்கள். இரண்டாம் தாரத்துக்குப் பிறந்தவர் ஜூனியர் அஜீத். தனக்குப் பிறகு தனது வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு வாரிசாக அசல் மனைவிக்குப் பிறந்தவர்களை விட்டுவிட்டு, இரண்டாம் தார மகன் அஜீத்தை அறிவிக்கிறார்.

இதில் கோபமடைந்த அசல் வாரிசுகள், தந்தை அஜீத்தை கொன்று விடுகிறார்கள். இது தெரியாத மகன் அஜீத் அவர்களுக்கே உதவப் போகிறார். அங்கே அவரையும் கொல்ல முயற்சிக்கிறார்கள். அதிலிருந்து தப்பி வரும் அஜீத் எப்படி பங்காளிச் சண்டையிலிருந்து மீள்கிறார், தன்னை லவ்வும் சமீரா-பாவனா இருவரில் யாரைக் கைப்பிடிக்கிறார் என்பது மீதிக் கதை.

இந்தப் படத்தின் முக்கிய அம்சம் சந்தேகமில்லாமல் அஜீத்தான். அசத்தலான தோற்றம், அதைவிட அசத்தலாக சண்டைக் காட்சிகளில் ஜொலிக்கிறார் மனிதர். குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய அந்த இரு சண்டைக் காட்சிகளிலும் அப்படி ஒரு ‘பர்ஃபெக்ஷன்’!.

வயதான அஜீத் வரும் காட்சிகள் மிகக் குறைவு. அதில் பெரிதாக கவர ஸ்கோப் இல்லை சீனியர் அஜீத்துக்கு. இரண்டு அஜீத்துக்கும் தோற்றத்தில், உடையில் கூட பெரிய மாற்றமில்லை. இருவரையும் வேறுபடுத்திப் பார்க்க ஒரு வித்தியாசம் இருக்கிறது. மூத்தவருக்கு நரைத்த முடி.. இளையவருக்கு அது இல்லை!!.

பாவனா, சமீரா இருவருக்குமே அஜீத்தை காதலிக்கும் வேலை. ஆனால் சமீராவை காட்டிய விதம் மகா சொதப்பல். மிகவும் வயதான மாதிரி ஒரு தோற்றம். இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வில்லன்களில் அசத்தலாய் வருகிறார் கெலி டோர்ஜி. ஷெட்டி என்ற பாத்திரத்தில் வரும் இவர் அலட்டிக் கொள்ளாமல் மிரட்டுகிறார்.

சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணாவும் கொடுத்த பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். படம் முழுக்க கிரிமினல் காரியங்களுக்கு உடந்தையாக வந்து, கடைசிக் காட்சிக்கு முந்திய காட்சியில் திருந்தும் வில்லனாக வரும் பிரெஞ்ச் போலீஸ் சுரேஷுக்கு இது மறுபிரவேச வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டுள்ளார். பிரதீப் ராவத்தும் படத்தில் உண்டு.

இந்த நட்சத்திர கும்பலில் காணாமல் போயிருப்பவர் பிரபு. சீனியர் அஜீத்தின் நண்பராக வருகிறார்.

அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை விட்டொழித்த அஜீத்தை, படம் முழுக்க சதா தலை தலை என்று புகழ்ந்து கொண்டே இருக்கிறது ஒரு கூட்டம். அதே போல பில்லாவில் ஆரம்பித்த ‘கோட்-சூட் ரேம்ப் வாக்கை’ இதிலும் தொடர்கிறார் அஜீத். இந்த இரண்டையும் தற்காலிகமாகவாவது தலைமுழுக முயற்சிக்கலாம் ‘தல’!.

ராஜீவை காப்பாற்றப் போகும் அஜீத் சுடப்பட்டு ஆற்றில் விழுகிறார். அதன் பிறகு மீண்டும் பாரிஸில் அதகளம் பண்ணுகிறார். லாஜிக்கெல்லாம் தேட முயற்சிக்கக் கூடாது!.

இடைவேளையின்போதே கதையின் போக்கு, அடுத்தடுத்த நகர்வுகள் தெரிந்து விடுவதால் ஒரு தொய்வு விழுகிறது. ஆனால் அதை யூகிசேது அண்ட் கோ சற்றே சரி கட்டுகிறது, தங்கள் காமெடியால்.

படத்தின் முக்கிய ப்ளஸ்… நீளம். 2 மணி 5 நிமிடம்தான் படம். காட்சிகளின் வேகமான நகர்வில் கதையில் உள்ள மைனஸ்கள் தெரிவதில்லை.

பரத்வாஜ் இசையில் டொட்டொடய்ங் பாட்டு கலகல… படம் முடிந்து வெளியில் வரும்போது எல்லார் வாயிலும் இந்தப் பாட்டு நீக்கமற நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மற்ற பாடல்கள், பின்னணி இசை பெரிதாய் கவரவில்லை.

பிரசாந்தின் ஒளிப்பதிவு அசத்தல். படத்துக்குப் பொருத்தமான பின்னணியை அதன் நோக்கம் மாறாமல் தந்திருக்கிறார். ஆனால் மலேஷியாவில் மும்பையைக் காட்ட முயன்றதைத் தவிர்த்திருக்கலாம்.

காட்சிகளை பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சரணும் அஜீத்தும். அதில் காட்டிய அக்கறையை ஒரு வெயிட்டான கதையைப் பிடிப்பதிலும் காட்டியிருக்கலாம். சில காட்சிகள், வட்டாரம் மற்றும் அட்டகாசத்தை நினைவூட்டுவதையும் தவிர்த்திருக்கலாம் சரண்.

அஜீத் ரசிகர்களுக்கு (மட்டும்!) இது ‘அசல் விருந்து’…!!