நடிப்பு: விஜய், அனுஷ்கா, சலீம் கவுஸ், ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே

ஒளிப்பதிவு: கோபிநாத்
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: பாபு சிவன்
தயாரிப்பு: ஏவிஎம்

மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.

கதைப்படி ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்) ஒரு தூத்துக்குடி பையன். ப்ளஸ்டூவை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் (ஸ்ரீஹரி) மாதிரி பெரிய போலீஸ் ஆ…பீஸர் ஆவது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார்.

வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார்.

அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.

இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, ‘நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட’ என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.

ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார்.

விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்… (ஹை… டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தை அழிக்கிறார்…

இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா… இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது. எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம்.

கஷ்டப்பட்டு நடிக்க விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே… இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.

கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். சகிக்கலை!

படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம் (இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!).

அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.

முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்!

கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை.

விஜய் ஆண்டனி… பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் ‘ஏன் இந்த கொல வெறி’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஒரு அதிவேகம்.

நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.

படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம ஓடு ஓடு ஓடு என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்லக் கூடும்!!


0 comments:

Post a Comment